செவ்வாய், 7 மே, 2013

நிழல் இரண்டு

தனியாய் மின்கம்ப விளக்கு
தவழ்ந்து செல்லும் மழைநீர்
தடவிச் செல்லும் காற்று
தலையாட்டும் மரம்
தயக்கத்தில் யாவும்

நிழல் இரண்டு
உடல் ஒன்றா! என?

சனி, 27 ஏப்ரல், 2013

மரமாகிப் போனவன்

மதி சூடும் இரவு மகள்
மதியின்று வரவில்லை
மனத்தோடு சென்றிடுவாய் - நாளை
மறவாமல் வந்திடுவாய் என்றாள்!

மரமென்று நினைத்தவளுக்கு-என்
மனம் எப்படி தெரியும் - உன்
மறுநாள் வருகைக்கு நான்
மரமாகிப் போனவன் என்று!

திங்கள், 31 டிசம்பர், 2012

புத்தாண்டு

காலத்தின் வேகத்தில்
கரைதாண்டாத் துகள்களாய்
ஞாலத்தின் பாவத்தில்
நாளும் இணைந்திருந்தோம்!
வேருக்குள் ஊரிட்ட
வீரத்தின் சாறெடுத்து 
போர், பகை, வஞ்சம் துடைத்து
பேர் சொல்லு மளவுக்கொரு
புது வாழ்க்கை வாழ்ந்திடவே 
புத்தாண்டை உணதாக்கிடு!
புதிய பூமி நமதாக்கிடு!

செவ்வாய், 21 ஜூன், 2011

சொர்க்கம்

பனி மேகங்களுக்கு யாரும்
பாடம் நடத்தி சென்றதில்லை
பசும் புல்வெளிக்கு உயிரளிக்க
மேகம் தவர்வதில்லை!

மனிதம் பேசும் எவனும்-இங்கு
மனிதம் காப்பதில்லை-பாமரனின்
குறைகள் கேட்கும் கடவுள்கூட
பசியை போக்கவில்லை!

நீ!
வாழ வந்த வாழ்வில்
ஏன் உய்ய மறுக்கிறாய்-நீ
பிறந்த பலன் இதுவென்று
உணர மறுக்கிறாய்!

ஏழை
கண்ணில் கடவுள் காணும்போது
மண்ணில் சொர்க்கம் காணுவாய்-உன்
உறவை உலகம் நாடும்போது
உன்னில் சொர்க்கம் நீளுவாய்!

அன்பே சிவம்

அணு கொடுத்த அண்டமோ
பாவம் போக்கும் பரமனோ
எதனை நீ ஏற்றுக்கொள்வாய்!

உணவோடு உடைகேட்டு
உயிர்வாழ திறம் கேட்கும்
பாமரர்க்கு உதவாமல் நீ!

ஐம்பொன்னில் சிலையையும்
ஆயிரம் கோவிலையும்
அமைப்பது பிழையல்லவோ!

இறுமாப்பும் கொள்ளாது
இருப்பதூஉம் நில்லாது
இதனையா வாழ்வென்கிறாய்!

அன்பெனும் சிவ மந்திரம்
ஓதாதவன் உயிரோடு
இருந்தென்ன? இறந்தும் என்ன?

சனி, 21 மே, 2011

கவிதை

மோனை எதுகை யேனையும்
சந்தத்தின் சொந்தமும்
யாப்பின் பகுப்பும் காணா கவிதையது
இளையவள் குறுநகையே..!

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

என் தாகம் தீர்க்கும் அருவி நீ!

காதல் எந்தன் காதில்-ஒரு
வார்த்தை சொல்லவே
காலம்தாண்டி காதல்கொண்டு
காத்துக்கிடந்தேன்!

பூ புன்னகைக்கும் நேரந்தனில்
செத்துவிடவே
எந்தன் நெஞ்சும் என்னை என்னை
ஆணையிடுதே!

மழையின் மேகம் கண்ட-ஆண்
மயிலைப்போலவே
உன்னை கண்ட பின்பு-என்
உள்ளம் துள்ளுதே!

நீரின் வாசம் கண்ட சிறு
பறவை போலவே!
உந்தன் வாசம் கண்டால்
என் மனமும் பறக்குதே!

தாகம் தீர்க்கும் அருவி
பேரழகி அல்லவா-என்
தாகம் தீர்க்கும் அருவி நீ!
பேரழகி நீ! அல்லவா!

மீண்டும் ஜனனம்

மண்ணோடு வான்வந்து காதல்செய்ய
காற்றோடு மழைவந்து கவிதைபாடும்!
உன்னோடு நான்சேர்ந்து காதல்செய்ய
என் மொழியோடு பேனாவும் யுத்தம் கொள்ளும்!

உன் அழகை நான் எழுத உத்தேசம்கொள்ள
உயிர் மெய் எழுத்தும் வரிசையில் நிற்கும்!

எதனோடு எதை சேர்த்து நான்
உனை வர்ணிப்பேன்-என்
உயிரோடு உன் மெய் சேர்த்தால்
நான் மீண்டும் ஜனிப்பேன்!

செவ்வாய், 2 மார்ச், 2010

எப்படிச்சொல்வேன்?

பூ பூக்கும் மலர்வனமெல்லாம்
பூ வாசம்தான்!
தேன் சிந்தும் எந்தன் நினைவில்
உன் வாசம்தான்!

மலர்தேடிச்சென்று
மது உண்ணும் வண்டு
மலர்வாடிபோனாலும்
மனம் மாறுமோ!

மணம்கொண்ட காற்றில்-என்
மனம்தேடும்போது-நீ
மறைந்தோடினாலும்-நான்
உனைத்தீண்டுவேன்!

இளந்தென்றலே-என்
இளமையும் நீயடி
உனைசேர்ந்திடும்-அந்த
இளையவன் நானடி!

பாவை பார்த்த பார்வை
என்ன எண்ணுதோ-நான்
பார்த்த பார்வை பாவம்
என்று எண்ணுதோ!

தேன் தராத பூவும்
எங்கு உள்ளது-ஆண்
விழி தொடாத பெண்மை
எங்கு உள்ளது!

நான்
காலம்கடந்த
இளைய கவிஞன்-பெரும்
காதல் நோயால்
துடிக்கும் இளைஞன்!

உனை நெஞ்சில்
சூல்கொண்ட நான்
பெண்ணல்ல
நீர் விலகிய காலம் சொல்ல!

திங்கள், 22 பிப்ரவரி, 2010

தள்ளிவைக்காதே

மார்கழி குளிரில் மனம் துள்ளியெழுந்து
காலைப்பனியில் கால் வைத்தபோது
கண்முன்னே பெண்முகம் மின்னுவதென்ன
அப்பொழுது என்மனம் என்னுவதென்ன-அதை
அறிவாயோ ஆடைகட்டிய நதியே-இவையெல்லாம்
உந்தன் பெண்மை செய்த சதியே!

பஞ்சணையில் நீயென்னை
தஞ்சம்கொள்ள கேட்டேனோ!
அஞ்சிவரும் காவிரியாய்
ஆர்ப்பரிக்க கேட்டேனோ!
கொஞ்சிவரும் இவன் இதழில்-உன்
பிஞ்சுமுகம் வைப்பாயோ பின்
இவன் இதழை உன் இதழால்
ஈரம் கொஞ்சம் செய்வாயோ!

வேறென்ன நான்கேட்க
சீர்கொண்ட தாரகையே
மலர்க்கூட்டம் நமைப்பார்க்க-நான்
உன் மடியில் தலைசாய்க்க
பெண்விரலும் என் மார்பில்
கோலம்போட கேட்கின்றேன்!

தாரைவார்த்தபிறகு
இவைசெய்வேன் நானென்று-நீ
தள்ளிவைத்தல் ஆகாது!
காதலியின் இதழ்முத்தம்
கெஞ்சலாய் ஒரு யுத்தம்
பின்பக்க தழுவலில்
பெண் மொத்தம் என்கைகளில்
அடைந்திடும் சுகமும்
இதன்பின் வருமோ-பெண்மை
சம்மதம் தருமோ!