ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

என் தாகம் தீர்க்கும் அருவி நீ!

காதல் எந்தன் காதில்-ஒரு
வார்த்தை சொல்லவே
காலம்தாண்டி காதல்கொண்டு
காத்துக்கிடந்தேன்!

பூ புன்னகைக்கும் நேரந்தனில்
செத்துவிடவே
எந்தன் நெஞ்சும் என்னை என்னை
ஆணையிடுதே!

மழையின் மேகம் கண்ட-ஆண்
மயிலைப்போலவே
உன்னை கண்ட பின்பு-என்
உள்ளம் துள்ளுதே!

நீரின் வாசம் கண்ட சிறு
பறவை போலவே!
உந்தன் வாசம் கண்டால்
என் மனமும் பறக்குதே!

தாகம் தீர்க்கும் அருவி
பேரழகி அல்லவா-என்
தாகம் தீர்க்கும் அருவி நீ!
பேரழகி நீ! அல்லவா!

மீண்டும் ஜனனம்

மண்ணோடு வான்வந்து காதல்செய்ய
காற்றோடு மழைவந்து கவிதைபாடும்!
உன்னோடு நான்சேர்ந்து காதல்செய்ய
என் மொழியோடு பேனாவும் யுத்தம் கொள்ளும்!

உன் அழகை நான் எழுத உத்தேசம்கொள்ள
உயிர் மெய் எழுத்தும் வரிசையில் நிற்கும்!

எதனோடு எதை சேர்த்து நான்
உனை வர்ணிப்பேன்-என்
உயிரோடு உன் மெய் சேர்த்தால்
நான் மீண்டும் ஜனிப்பேன்!

செவ்வாய், 2 மார்ச், 2010

எப்படிச்சொல்வேன்?

பூ பூக்கும் மலர்வனமெல்லாம்
பூ வாசம்தான்!
தேன் சிந்தும் எந்தன் நினைவில்
உன் வாசம்தான்!

மலர்தேடிச்சென்று
மது உண்ணும் வண்டு
மலர்வாடிபோனாலும்
மனம் மாறுமோ!

மணம்கொண்ட காற்றில்-என்
மனம்தேடும்போது-நீ
மறைந்தோடினாலும்-நான்
உனைத்தீண்டுவேன்!

இளந்தென்றலே-என்
இளமையும் நீயடி
உனைசேர்ந்திடும்-அந்த
இளையவன் நானடி!

பாவை பார்த்த பார்வை
என்ன எண்ணுதோ-நான்
பார்த்த பார்வை பாவம்
என்று எண்ணுதோ!

தேன் தராத பூவும்
எங்கு உள்ளது-ஆண்
விழி தொடாத பெண்மை
எங்கு உள்ளது!

நான்
காலம்கடந்த
இளைய கவிஞன்-பெரும்
காதல் நோயால்
துடிக்கும் இளைஞன்!

உனை நெஞ்சில்
சூல்கொண்ட நான்
பெண்ணல்ல
நீர் விலகிய காலம் சொல்ல!

திங்கள், 22 பிப்ரவரி, 2010

தள்ளிவைக்காதே

மார்கழி குளிரில் மனம் துள்ளியெழுந்து
காலைப்பனியில் கால் வைத்தபோது
கண்முன்னே பெண்முகம் மின்னுவதென்ன
அப்பொழுது என்மனம் என்னுவதென்ன-அதை
அறிவாயோ ஆடைகட்டிய நதியே-இவையெல்லாம்
உந்தன் பெண்மை செய்த சதியே!

பஞ்சணையில் நீயென்னை
தஞ்சம்கொள்ள கேட்டேனோ!
அஞ்சிவரும் காவிரியாய்
ஆர்ப்பரிக்க கேட்டேனோ!
கொஞ்சிவரும் இவன் இதழில்-உன்
பிஞ்சுமுகம் வைப்பாயோ பின்
இவன் இதழை உன் இதழால்
ஈரம் கொஞ்சம் செய்வாயோ!

வேறென்ன நான்கேட்க
சீர்கொண்ட தாரகையே
மலர்க்கூட்டம் நமைப்பார்க்க-நான்
உன் மடியில் தலைசாய்க்க
பெண்விரலும் என் மார்பில்
கோலம்போட கேட்கின்றேன்!

தாரைவார்த்தபிறகு
இவைசெய்வேன் நானென்று-நீ
தள்ளிவைத்தல் ஆகாது!
காதலியின் இதழ்முத்தம்
கெஞ்சலாய் ஒரு யுத்தம்
பின்பக்க தழுவலில்
பெண் மொத்தம் என்கைகளில்
அடைந்திடும் சுகமும்
இதன்பின் வருமோ-பெண்மை
சம்மதம் தருமோ!

சனி, 23 ஜனவரி, 2010

காதல் பசி

நடைபயிலும் நதியிடத்து
நாணம் என்ன கேட்டுச்சென்றேன்-உன்
நளினம் மட்டும் காட்டியது!

மலர்சொரியும் மரமிடத்து
வாசம் என்ன கேட்டுச்சென்றேன்-உன்
சுவாசம் மட்டும் வீசியது!

மது உண்ணும் மலர்வண்டிடம்
மலரென்ன கேட்டுச்சென்றேன்-உன்
உதட்டை தீண்டியது!

வண்டிற்கு கொடுத்திட்ட நீ
வாணனுக்கும் கொடுப்பாயோ மலரை
நானும் பசியாற!