திங்கள், 12 அக்டோபர், 2009

களவு

காதல் என்ன
களவாடும் தளமா-உன்
கைக்குட்டை முதல் நீ
கசக்கி எரிந்த
காகிதம் வரை
களவாட சொல்கிறதே மனம்!

-----X-----X-----X-----X-----

களவும் கற்றுமற
களவுபோன என்னை மறக்காதே!

திங்கள், 5 அக்டோபர், 2009

காதலனாக வேண்டும்

பூவா பூவை பனி
புணரும் நேரம்
பூவை மனதில்-என்
காதல் பூத்திட வேண்டும்!

சோம்பல் முறிக்கும்
ஆம்பல் மலரிடம்-என்
அன்பை மட்டும்
அறிவிக்க வேண்டும்!

ஒளியும் வளியில்
வளரும் நேரம்-என்
வலியை வளையால்
உணர்ந்திட வேண்டும்!

நீரில் நனையும்
நறுமுகையிடம்-நான்
உருகும் காரணம்
உரைத்திட வேண்டும்!

பணிக்கு செல்லும்
பனிமலரிடம்-நான்
பணிந்தவன் என்று
பகிர்ந்திட வேண்டும்!

மதிய உணவில்
மரம்கொத்தியாகி-அவள்
மனதை என் நினைவு
கொத்திப்போக வேண்டும்!

அந்தி நேரம்
அந்திமந்தாரையிடம்-அவள்
ஆணவம் பற்றி
அவிழ்த்துவிட வேண்டும்!

துயிலும் சிறிய
தும்பை மலரிடம்-என்
துன்பம் பற்றி
தெரிவிக்க வேண்டும்!

நடுநிசி நேரம்
நிலவின் துயிலை-நான்
கணவாய் மாறி
கலைத்திட வேண்டும்!

அனைத்தும்!
பெண்ணவள் என்னவள் ஆன பின்பு!

காத்திருக்கிறேன்!

என்னோடு நீ கொண்ட வார்த்தை
சில வார்த்தை என்றாலும்
மறக்காது கண்மணியே!

உன்னோடு நான் வாழ்ந்த காலம்
சில நொடிகள் என்றாலும்
தீராது பொன்மணியே!

உன் நினைவு என் கனவை
தட்டி தட்டி எழுப்புதடி
என் காதல் உன் நெஞ்சை
துளிகூட இழுக்கவில்லையா!

எப்பொழுது தோன்றுகிறதோ
அந்த காதல் வலி
அப்பொழுது சொல் என்னிடம்
அல்லது என் கல்லறையிடம்!
காத்திருக்கிறேன்!

காதல் வழங்குதியோ

காற்று கவிதையிலே என்
காதலை தூதுவிட்டேன்-அது
எந்தன் கனவுகளை-உன்
நெஞ்சில் எழுதட்டுமே!

நான் பார்க்கும் விழிச்சுடரே
பெண் பாவை பொருதியே-நான்
நோக்கும் நிலமெங்கிலும்-உன்
நிழலே தெரியுதடி!

அந்திவான முகிலே-அதில்
சிலிர்த்திடும் கருங்குயிலே-உன்
நெஞ்சில் குடியிருக்க-நான்
சரிதானா சொல் மயிலே!

ஆரிய குலமகளே
ஆதவ குலத்தோன்றலே-உன்
அன்பில் உறைந்தானடி இந்த
திராவிட திருச்சோழனே!

வானின் ஒரு மதியே-இந்த
வாணன் திருமதியே-உனை
நாளும் நினைத்திருக்க-உன்
காதல் வழங்குதியோ!

உனைப்பற்றி எழுத

வனத்த அழகில்
வளர்ந்து நிற்கும் செம்மீனே!
உன் வளர்ந்த பெண்மை
என்னை கொல்லுது செம்மானே!
உன் சிரித்த முகத்தின்
உதட்டில் வடியும் செந்தேனே!
அதை எடுத்து குடித்து
மயக்கம் கொள்ள வந்தேனே!
உதிரும் பூவின்
உதிரம் கொண்டு வந்தேனே!
உன் உயிரின் உள்ளே
ஒளிந்து கொள்வேன் பெண்மானே!
உன் கண்ணிரண்டை பார்த்தால்
காதல் செய்யத்தூண்டும்-உன்
கண்கள் பார்த்தால் எவனும்
கவிஞனாக வேண்டும்!
கவிஞனான எவனும்
கவிதை எழுத வேண்டும்!
உனைப்பற்றி எழுத
உதிர மிழக்கவேண்டும்!

பூவை

பூவான
பூவைக்கு
பூவைக்க எண்ணி
பூக்கொண்டு சென்றேன்!
பூப்போல
பூவையவள்
பூத்திருக்கும்போது
பூவுக்கு
பூ வைப்பதென்ன
பூவை வைப்பது என்ன!
பூவைக்கு வைப்பதும் என்ன!

பூக்களின் மத்தியில்

சில்லென்று வீசும் வாடைக்காற்றில்-நீ
குளிர்கொண்டு என்தோள் சாயும்போதும்-என்
வலக்கையை வலக்கையில் ஏந்தி
கைரேகைகளில் ஊர்ந்திடும்போதும்
உன் உதட்டின் ஈரம் என்
உள்ளங்கையை ஈரமாக்கிடும்போதும்
நீகொண்ட காதலை நானறிவேன்!
நீகொண்ட காதலை நானறியும்போது
நான்கொண்ட காதலை பூக்களரியும்!

ஏதேனும் சொல்!

உன் முகத்தை நானும் மறந்திருந்தேன்-நீ
மறுமுறை ஒருமுறை காணும்வரை!
கேளிக்கை முடிந்த மறுகணமே-என்
உணர்வுகள் போனது ஒருவிதமே-உன்
குரலில் கரையும் கைப்பேசி என்னோடு-என்
நினைவு முழுதும் உன்னோடு!
நானாய் மறக்க நினைத்தாலும்-உன்
நினைவுகள் என்னை விடுவதில்லை-உந்தன்
சிரிப்பொலியில் சிதற ஆசைகொண்டேன்-உன்
சேலையாய் மாற மோகம் கொண்டேன்!
ஆம் என்று சொல்லிவிடு
ஆயிரம் ஆண்டுகள் காத்திருப்பேன்!
இல்லை என்று சொல்லிவிடு
இன்னொரு பெண்ணை நினையாதிருப்பேன்!
ஏதேனும் சொல்!

ஆம் என்று சொல்!

வான்முகில் தேரில்
வளம் வரும்
மானே-உனை
சேர்ந்தால் வாழ்வில்
முக்திதானே!

சின்னவள் தரிக்கும்
சிலம்புதனில்-நான்
ஒலியாய் வேண்டும்!
பெண்மை பார்க்கும்
பார்வைதனில்-நான்
ஒளியாய் வேண்டும்!

பனியில் நனைந்த
பூவாய் என்றும்-உன்
நினைவு இருக்கும்
எந்தன் மனதில்!
வாசம் தரும்
பூவாய் என்றும்
வாழவேண்டும்
பாவை மனதில்!

காலை எது
மாலை எது
மறந்திருந்தேன்
நாளும் நானே!
உன்னை சேரும்
நாளை எண்ணி
உறங்காத
இரவாய் ஆனேன்!

பனிக்காற்றே
பரவச ஊற்றே
பக்கம் வந்தால்
பறக்கிறேன் நானே!
காலம் தாண்டும்
காதல் இதுவே
கனவிலும் உனை
மறவேன் நானே!

வான்மதியே
வானவில் தீவே
வாழவேண்டும்
உன்னுடன் நானே!
என்வாழ்வை
என்னுடன் வாழ
வார்த்தை ஒன்றை
உதிர்ப்பாய் பெண்ணே!

சந்திப்பு

முதல் பார்வை!
முதல் பயணம்!
முதல் காதல்!
முதல் இரவு!
முதல் சந்திப்பு!

இமை சிலிர்க்கும்-நீ!
இமைகொட்டாமல் நான்!
இடையிலோரிடையன்!
இரண்டாம் சந்திப்பு!

மூன்றாம் சந்திப்பு-என்
முகம் மறந்திட்ட நீ-உன்
முழு நினைவுகளுடன் நான்!

பாராட்டு

இருவரி குறளாய்
சரியென இருக்கும்-உன்
உதடு!
நான் ரசித்த
முதல் கவிதை!
கவிதையை முத்தமிட்டு
பாராட்ட ஆசை!
ஏற்றிடுவாயோ-என்
பாராட்டை!

ஏக்கம்

சித்தத்தினால் உன்மேல் கொண்ட
பித்தத்தினால் சூடானது உடல்
வெப்பத்தினால்!
இரத்தத்தினில் உள்ள
வெப்பத்தினை குறை-உன்
முத்தத்தினால்!

எப்பொழுது தொடங்குமென
ஏங்குகிறேன் தோழி!
அப்பொழுது அடங்கும்-என்
உயிரின் மீதி!

காதலர் தினம்

கண் மையிழையோடிய
கண்க ளிரண்டினில்
மச்சங்கள் நின்றாட!
செவ்விதழோரமாய்
சிந்தும் புன்னகையில்-என்
நெஞ்சம் எழுந்தாட!
செவிகளிரண்டிலும்
சிறிய குண்டலங்கள்
சிந்து படித்தாட!
கார் மேகமதை
கூந்தலாய் கொண்ட
கன்னியும் சேர்ந்தாட!
பெண்மை சமைத்திட்ட
பாக மிரண்டும்-என்
எண்ணத்தில் எழுந்தாட!
வஞ்சியவள் இடைதனில்
கஞ்சனம் செய்திட்ட
பிரம்மனும் ஆட!
இரு கால்கொலுசொலியில்
முக்காலத்தை மறந்து
நானும் ஆட!
நானாட! நீயாட! நாமாட!
நம்மோடு காதலர் கூட்டமெல்லாமாட!
நடக்கிறது காதலர் திருவிழா-புது
காதலர்க்கு பெருவிழா!

என் ஹைக்கூ

உதட்டருகே மச்சம்-உன்
அழகிற்கு பிரம்மன் வைத்த
திருஷ்டிபொட்டு!


காலை பனியும் மாலை வெயிலும்
சேர்ந்துவரக்கண்டேன்
எதிரே என்னவள்!