செவ்வாய், 21 ஜூன், 2011

சொர்க்கம்

பனி மேகங்களுக்கு யாரும்
பாடம் நடத்தி சென்றதில்லை
பசும் புல்வெளிக்கு உயிரளிக்க
மேகம் தவர்வதில்லை!

மனிதம் பேசும் எவனும்-இங்கு
மனிதம் காப்பதில்லை-பாமரனின்
குறைகள் கேட்கும் கடவுள்கூட
பசியை போக்கவில்லை!

நீ!
வாழ வந்த வாழ்வில்
ஏன் உய்ய மறுக்கிறாய்-நீ
பிறந்த பலன் இதுவென்று
உணர மறுக்கிறாய்!

ஏழை
கண்ணில் கடவுள் காணும்போது
மண்ணில் சொர்க்கம் காணுவாய்-உன்
உறவை உலகம் நாடும்போது
உன்னில் சொர்க்கம் நீளுவாய்!

அன்பே சிவம்

அணு கொடுத்த அண்டமோ
பாவம் போக்கும் பரமனோ
எதனை நீ ஏற்றுக்கொள்வாய்!

உணவோடு உடைகேட்டு
உயிர்வாழ திறம் கேட்கும்
பாமரர்க்கு உதவாமல் நீ!

ஐம்பொன்னில் சிலையையும்
ஆயிரம் கோவிலையும்
அமைப்பது பிழையல்லவோ!

இறுமாப்பும் கொள்ளாது
இருப்பதூஉம் நில்லாது
இதனையா வாழ்வென்கிறாய்!

அன்பெனும் சிவ மந்திரம்
ஓதாதவன் உயிரோடு
இருந்தென்ன? இறந்தும் என்ன?