பூவா பூவை பனி
புணரும் நேரம்
பூவை மனதில்-என்
காதல் பூத்திட வேண்டும்!
சோம்பல் முறிக்கும்
ஆம்பல் மலரிடம்-என்
அன்பை மட்டும்
அறிவிக்க வேண்டும்!
ஒளியும் வளியில்
வளரும் நேரம்-என்
வலியை வளையால்
உணர்ந்திட வேண்டும்!
நீரில் நனையும்
நறுமுகையிடம்-நான்
உருகும் காரணம்
உரைத்திட வேண்டும்!
பணிக்கு செல்லும்
பனிமலரிடம்-நான்
பணிந்தவன் என்று
பகிர்ந்திட வேண்டும்!
மதிய உணவில்
மரம்கொத்தியாகி-அவள்
மனதை என் நினைவு
கொத்திப்போக வேண்டும்!
அந்தி நேரம்
அந்திமந்தாரையிடம்-அவள்
ஆணவம் பற்றி
அவிழ்த்துவிட வேண்டும்!
துயிலும் சிறிய
தும்பை மலரிடம்-என்
துன்பம் பற்றி
தெரிவிக்க வேண்டும்!
நடுநிசி நேரம்
நிலவின் துயிலை-நான்
கணவாய் மாறி
கலைத்திட வேண்டும்!
அனைத்தும்!
பெண்ணவள் என்னவள் ஆன பின்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக